க்ரைம்

இளையான்குடி அருகே மணல் கடத்தலுக்கு எதிராக புகார் செய்த சமூக ஆர்வலரை கடத்திய இருவர் கைது

செய்திப்பிரிவு

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மணல் கடத் தலுக்கு எதிராக புகார் செய்த சமூக ஆர்வலரை கடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

இளையான்குடி அருகே வடக்கு சாலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (34). சமூக ஆர்வலரான இவர் மணல் கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து புகார் கொடுத்து வந்தார். மேலும் நீதிமன்றத்திலும் சாலைக் கிராமம் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அள்ளுவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த ராதாகிருஷ்ணனை அதே பகுதியைச் சேர்ந்த பாலுச்சாமி, வருந்தி கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் ஆகியோர் காரில் கடத்தி சென்று பஞ்சனூர் விலக்கு அருகே வைத்து மிரட்டியுள்ளனர். அப்போது அவ்வழியாக சிலர் வந்ததை அடுத்து ராதாகிருஷ்ணனை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் சாலைக் கிராமம் போலீஸார் பாலுச்சாமி, வசந்தகுமார், வாதவனேரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். தொடர்ந்து சிவகங்கை டிஎஸ்பி சிபிசாய் சவுந்தரியன் தலைமையிலான போலீஸார் பாலுச்சாமி, வசந்த குமாரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT