செய்யாறு: செய்யாறில் பெண்ணை கார் ஏற்றி படுகொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெங்கட்ராயன் பேட்டை சேட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நெசவு தொழிலாளி முருகன் (45). இவரது மனைவி விஜயலட்சுமி (39). இவர், நேற்று காலை 7 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் செய்யாறு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று விஜயலட்சுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், தூக்கி வீசப்பட்டு விஜயலட்சுமி பலத்த காயமடைந்தார். அவரை, அவ் வழியாக சென்ற சிலர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி உயிரிழந்தார்.
இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை சிலர் விரட்டி சென்றனர். அதில், செய்யாறு வைத்தியர் தெருவில் விபத்தை ஏற்படுத்திய காரை நிறுத்திவிட்டு அதிலிருந்தவர்கள் தப்பியுள்ளனர். இந்த தகவலறிந்த செய்யாறு காவல் துறையினர் விரைந்து சென்று அந்த காரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விஜயலட்சுமி உயிரிழப்பு தொடர்பாக அவரது கணவர் முருகன் செய்யாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘‘எங்களுக்கும், செய்யாறு கிடங்கு தெருவைச் சேர்ந்த பிரபு, கொடநகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (எ) மாரி ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி எனது மனைவி விஜயலட்சுமியிடம், பிரபு மற்றும் மாரி ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, எனது மனைவியை என்றாவது ஒரு நாள் உன்னை கொலை செய்வேன் என பிரபு தரப்பினர் மிரட்டினர். அவர்கள்தான் எனது மனைவி மீது கார் ஏற்றி கொலை செய்துள்ளார்கள்’’ என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செய்யாறு காவல்நிலைய ஆய்வாளர் பாலு, தலைமறைவாக உள்ள பிரபு மற்றும் வெங்கடேசன் (எ) மாரி ஆகியோரை தேடி வருகின்றார். காவல் துறையினர் நடத்திய முதற் கட்ட விசாரணையில், பிரபுவின் நண்பர் சதீஷ் குமார் என்பவரின் காரை எடுத்து சென்று விஜயலட்சுமியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தலை மறைவாக உள்ள இரு வரையும் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் பிரபு என்பவரை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கொலையில் சதீஷ்குமாருக்கு தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக காவல் துறை தரப்பில் விசாரித்த போது, ‘‘செய்யாறு புறவழி சாலையில் விஜயலட்சுமி, பிரபு தரப்பினர் இடையே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய் வதில் எல்லை பிரச்சினை இருந்துள்ளது. இரு தரப்பின ரையும் காவல் அதிகாரிகள் சமாதனாம் செய்து வைத்தனர். ஆனால், கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறு முற்றியது.
மதுபாட்டில் விற்பனை செய்வதில் இடையூறாக இருந்த விஜயலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளனர். வழக்கம்போல் விஜயலட்சுமி நேற்று மது பாட்டில்களை ஒரு பையில் வைத்துக்கொண்டு விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் பைபாஸ் சாலை யில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த பிரபு, மாரி ஆகியோர் விஜயலட்சுமியை காரை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்’’ என்றனர்.