திருப்போரூர்: திருப்போரூர் அருகே நண்பரின் புது பைக்கை இரவல் வாங்கிச் சென்ற இளைஞர், சாலையோரம் பழுதாகி நின்றிருந்த மினி லாரி மீது மோதியதில் அவரும் பின்னால் அமர்ந்து சென்ற 2 சிறுவர்களும் என 3 பேர் உயிரிழந்தனர்.
சென்னை பெருங்குடி கல்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (27). இவர் திருப்போரூர் அருகே கரும்பாக்கத்தை அடுத்துள்ள விரால்பாக்கம் கிராமத்தில் மனைவி மற்றும் 3 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த உறவினர் மகன் பாலாஜி (14) என்பவர் அரையாண்டு விடுமுறைக்காக நாகராஜ் வீட்டுக்கு வந்திருந்தார்.
இவர் திருவான்மியூரில் உள்ள அரசு மாநகராட்சிப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நள்ளிரவு விரால்பாக்கம் பகுதியில் இருந்த தேவாலயம் ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் நாகராஜ் மற்றும் பாலாஜி இருவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இரவு 1 மணியளவில் அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜோஷ்வா என்பவரின் புதிய மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்ப்பதாக கூறி பைக்கை பெற்றார். அப்போது சிறுவன் பாலாஜியையும் பக்கத்து வீட்டுப் பையன் ரிஷாக் (14) என்ற சிறுவனையும் அழைத்துக் கொண்டு கொட்டமேடு வரை சென்று வருவதாகக் கூறி புறப்பட்டார்.
வெங்கூர் பகுதியில் வந்தபோது சாலையோரம் பழுதாகி நின்றுக் கொண்டிருந்த மினி லாரி மீது நாகராஜ் ஓட்டி வந்த பைக் பயங்கரமாக மோதியதாக தெரிகிறது. இதில் மூவரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருப்போரூர் போலீஸார் சடலங்களைப் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.