க்ரைம்

வாலாஜா அருகே இருவர் படுகொலை: காவல் துறையினர் விசாரணை

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: வாலாஜா அருகே இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, லாரி ஓட்டுநரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வி.சி.மோட்டூர் அண்ணாசாலை அருகே லாரி ஷெட் உள்ளது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு (40), சரவணன் (35) ஆகியோர் நேற்று மாலை அந்த பகுதியில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல்,குழந்தைவேலு மற்றும் சரவணனையும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

இதில், குழந்தைவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரவணன் படுகாயங்களுடன் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரும் உயிரிழந்தார். இருவரின் உடலையும் கைப்பற்றிய வாலாஜா காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வாலாஜா காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் லாரி ஓட்டுநர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இருவரும் படுகொலை செய்யப்பட்டதற்கு முன்விரோதம் காரணமா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT