திருச்சி: திருச்சி மாநகரில் கடந்தாண்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 16,526 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாநகரில் கடந்தாண்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதுவரை 16,526 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 185 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1997-ம் ஆண்டு திருச்சி மாநகர காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டதிலிருந்து கடந்தாண்டில்தான் அதிகளவிலானோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது 2020-ம் ஆண்டை விட (40 பேர்) 4 மடங்கும், 2021-ம் ஆண்டைவிட (85 பேர்) 2 மடங்கும் அதிகமாகும்.
கடந்தாண்டில் கஞ்சா விற்பனை செய்த 258 பேர், புகையிலை மற்றும் குட்கா போதை பொருட்களை விற்பனை செய்த 770 பேர், லாட்டரி சீட்டு விற்பனை செய்த 137 பேர், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த 1,630 பேர், சூதாட்டத்தில் ஈடுபட்ட 156 பேர், பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 12,085 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு நன்னடத்தை பிணையத்தை மீறியதாக 34 ரவுடிகள் உட்பட 53 பேருக்கு நிர்வாக செயல்துறை நடுவரால் சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த 2020, 2021 ஆண்டுகளைவிட கடந்தாண்டில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. குறிப்பாக குற்றச்செயல்கள் அதிகளவில் நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு உதவி ஆணையர்கள் தலைமையில் அதிகளவிலான போலீஸாரைக் கொண்டு 2,190 முறை பகுதி ஆதிக்கம் செய்யும் நிகழ்வை நடத்தி குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களிடமிருந்து 2,629 மனுக்கள் பெறப்பட்டு குறைகளைத் தீர்க்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.