நாமக்கல்: ராசிபுரம் அருகே சிறுவனை கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ராசிபுரம் அருகே சீராப்பள்ளி மூப்பனார் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சேகோ ஆலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜாமணி, மகள் நவீனாஸ்ரீ (5), மகன் தருண் (3). இந்நிலையில், பாலமுருகனின் வீட்டின் அருகே உள்ள ராகுல் என்பவரின் வீட்டின் முன்பு நேற்று முன்தினம் மாலை தருண் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த ராகுல், தருணை அடித்து தாக்கியுள்ளார். அதைப் பார்த்து பதறிய சிறுவனின் தாயார் ராஜாமணி மற்றும் அக்கம் பக்கத்தினர் தருணை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியில் அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக நாமகிரிப் பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ராகுலை (24) கைது செய்தனர். விசாரணையில், ராகுல் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.