திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை கட்டைபையில் வைத்து பேருந்தில் எடுத்துச் செல்ல முயன்ற பெண்ணிடம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கர்ணலாபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன்-விஜயா தம்பதி. இவர்கள்,சென்னை செம்மஞ்சேரி பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லை.
இதனால், துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட்-நீர்த்தி தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை அரசு விதிகளை மீறி சில நாட்களுக்கு முன்பு தத்தெடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு, சாட்சியாக விஜயாவிடம் குழந்தை ஒப்படைப்பதற்கான மனப்பூர்வ கடிதத்தை நீர்த்தியிடம் இருந்து எழுதி வாங்கியுள்ளனர்.
இதற்கிடையில், அந்த பெண் குழந்தையை ஒரு கட்டைபையில் வைத்துக்கொண்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலை வழியாக கர்ணலாபாடிக்கு விஜயா நேற்று பேருந்தில் செல்ல முயன்றுள்ளார். அந்த நேரத்தில் குழந்தை அழும் சத்தத்தை கேட்டு அங்குள்ள கடை உரிமையாளர் ஒருவர், விஜயாவை நிறுத்தி பையை திறந்து பார்த்துள்ளார்.
அதில், குழந்தை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்த மற்ற கடைக்காரர்கள் உதவியுடன் விஜயா மற்றும் குழந்தையை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர்.
கட்டைபையில் இருந்து பிறந்த ஏழு நாட்களே ஆன பெண் குழந்தையை மீட்ட காவலர்கள் பெண் குழந்தை கடத்தி வரப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக, நீர்த்தி எழுதிக் கொடுத்த கடிதம் குறித்தும் குழந்தை தத்தெடுத்தது குறித்தும் விசாரிப்பதற்காக நீர்த்தியை நேரில் வருமாறு அழைத்துள்ளனர். மேலும், பெண் குழந்தையை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.