உதகை: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா விற்பனை, பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்த புகார்கள் அதிகரிக்க தொடங்கியதால், தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் சென்ற ஆண்டு முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 1.0, 2.0 என்ற போலீஸாரின் அதிரடி நடவடிக்கைகளின்போது, 10 ஆயிரத்துக்கும் அதிகமான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கஞ்சா வேட்டை 3.0 நீலகிரி மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும், கடந்த டிசம்பர் 12-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்று முதல் நேற்று முன்தினம் வரை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30 வழக்குகள் பதிந்து 37 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக அவர்கள் வாங்கி குவித்த சொத்துகளையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பும் பணியில் நீலகிரி மாவட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.