க்ரைம்

கிருஷ்ணகிரி | வீட்டில் அதிக சத்தம் வந்ததால் தகராறு - பாத்திர வியாபாரி படுகொலை

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே பாத்திர வியாபாரியை கொலை செய்த அவரது தம்பி மகனை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளியை சேர்ந்த பாத்திர வியாபாரி பெருமாள் (63). இவர் இருசக்கர வாகனம் மூலம் பிளாஸ்டிக் குடங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை ஊர், ஊராகச் சென்று விற்பனை செய்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் வியாபாரத்திற்கு சென்றவரை, ராயக்கோட்டை - எச்சம்பட்டி சாலையில் கிருஷ்ணன் என்பவரின் நிலத்தின் அருகே மர்ம நபர் வழி மறித்து கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில், பெருமாளுக்கு மல்லிகா என்கிற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், பெருமாளுக்கும், அவரது தம்பி நாகராஜ் என்பவரது மகன் சக்திவேல் (23) என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது. சக்திவேல், பெருமாள் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. சக்திவேல் வீட்டில் ஹோம் தியேட்டரில் அதிகளவு சத்தம் வைத்து தொடர்ந்து இடையூறு செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலையும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், நேற்று காலை வியாபாரத்திற்கு சென்ற பெருமாளை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து சக்திவேலை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT