பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

சென்னை | நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: ரூ.1.40 கோடி முடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அமைந்தகரை பகுதியில் ஆரூத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்துக்கு திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உட்பட தமிழகம் முழுவதிலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் இருந்தன.

இந்நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36 ஆயிரம் வீதம் பத்து மாதம் பணம் தருவதுடன் 2 கிராம் தங்கக் காசு தருவதாகவும் அறிவித்தனர். இதை நம்பி ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் ரூ.2,400 கோடி வரை முதலீடு செய்ததாகவும், ஆனால், ஆரூத்ரா கோல்டு நிறுவனம் உறுதி அளித்தபடி பணத்தை கொடுக்காமல் பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அந்நிறுனத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான பாஸ்கர், மோகன்பாபு, பேச்சி முத்துராஜ் என்ற ரபீக், பட்டாபிராம், ஐயப்பன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை அடுத்தடுத்து போலீஸார் கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைந்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் கே.ஆர்.கோயில் தெருவை சேர்ந்த ரூசோ (42) என்ற முக்கிய நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1 கோடியே 40 லட்சத்தை பொருளாதார குற்றப்பிரிவினர் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT