சேலம்: சேலத்தில் மது போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியரை பொதுமக்கள் வகுப்பறையில் அடைத்து சிறை வைத்தனர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு நேற்று காலை மது போதையில் ஒரு ஆசிரியர் வந்துள்ளார். இதுகுறித்து தகவல்அறிந்து வந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆசிரியரிடம் மது போதையில் வந்தது குறித்து கேள்வி எழுப்பினர். போதையில் இருந்த ஆசிரியர் பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, ஆசிரியரை வகுப்பறையில் வைத்து அடைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் போலீஸார் வகுப்பறையில் இருந்த ஆசிரியரை மீட்டனர். ஆசிரியர் மது போதையில் பள்ளிக்கு வந்தது குறித்து, தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். பள்ளி குழந்தைகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் மது போதையில் வந்த ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.