க்ரைம்

புதுச்சேரி | சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வன்கொடுமை செய்த 8 பேருக்கு வாழ்நாள் சிறை

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 பேருக்கு வாழ்நாள் வரை ஆயுள்தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. மொத்தம் 9 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.

புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 53). இவர் கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணையை கவனித்துக் கொள்ளவும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்ட வேலைகளுக்கு அனுப்பவும் ஆட்களை வைத்து இருந்தார். தமிழகப் பகுதிகளில் இருந்து சிறுமிகளை அழைத்து வந்து கொத்தடிமையாக கன்னியப்பன் ஈடுபடுத்தியுள்ளார்.

கடந்த 2020ல் புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு குழுவினர் வில்லியனூரை அடுத்த கோர்க்காடுக்கு சென்று சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது குறித்து ரகசியமாக விசாரித்தனர். இதில் சிறுமிகள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீஸாரின் உதவியுடன் சென்று அந்த சிறுமிகளை மீட்ட குழந்தைகள் நலக்குழுவினர் புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

தொடர்ந்து சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில், ரூ.3 ஆயிரத்துக்கு கொத்தடிமைகளாக அவர்கள் வாத்து மேய்க்க வரவழைக்கப்பட்டு, பண்ணையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பப்ட்டது தெரியவந்தது. பண்ணையில் உள்ள அறையில் அந்த சிறுமிகளுக்கு கன்னியப்பன் உள்பட பலர் போதை பொருட்களை கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுமையும் வெளிவந்தது. மருத்துவ பரிசோதனையில் 5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.

இதுகுறித்து மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமிகள் அடையாளம் காட்டியதன்படி கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் உட்பட அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து புதுச்சேரி போஸ்கோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இவ்வழக்கில் இன்று போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார்.

இதில் கன்னியப்பன், சரத்குமார், ராஜ்குமார், பசுபதி, சிவா, மூர்த்தி ஆகிய 6 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. காத்தவராயன், சுபா ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ஆறுமுகத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. வேலு என்பவர் விடுதலை செய்யப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு 7 லட்சமும் மற்ற 4 சிறுமிகளுக்கு 5 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இவ்வழக்கில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். சிறுவன் ஒருவன் சிறார் சீர்த்திருத்தப்பள்ளியில் உள்ளான்.

SCROLL FOR NEXT