புதுடெல்லி: ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் பூணாவாலா தான் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார்.
தனது லிவ் இன் பார்ட்னர் ஷ்ரத்தா வாக்கரை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி அதனை பல்வேறு பகுதிகளிலும் அப்புறப்படுத்திய இளைஞர் அஃப்தாப் பூணாவாலா டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஷ்ரத்தாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்னர் அஃப்தாப் தன் மீதான எந்த குற்றச்சாட்டையும் மறுக்கவில்லை. கொலையை ஒப்புக் கொண்டதோடு அதை எப்படி செய்தார் என்பது உட்பட அனைத்தையும் ஒப்பித்தார்.
இந்நிலையில், அவர் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை அஃப்தாப் வாபஸ் பெற்றுள்ளதாக தெரிகிறது. அஃப்தாபுடன் வழக்கறிஞர் எம்.எஸ்.கான் சுமார் 50 நிமிடங்கள் கலந்துரையாடிவிட்டு இத்தகவலை தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே டெல்லி போலீஸார் அஃப்தாபுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஷ்ரத்தா கொலை சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் அஃப்தாபுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் பூணாவாலா தான் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.