க்ரைம்

5 மாத பெண் குழந்தையை விற்க முயற்சி: தூத்துக்குடியில் தாய் உட்பட 4 பேர் கைது

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 5 மாத பெண் குழந்தையை விற்க முயன்ற தாய் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் ஒரு கும்பல் குழந்தை விற்பனையில் ஈடுபடவுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டிஎஸ்பி சத்தியராஜ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான தனிப்படை போலீஸார் சாதாரண உடையில் சென்று, அந்த கும்பலிடம் குழந்தையை வாங்குவது போல பேசியுள்ளனர்.

இதில் ரூ.2 லட்சத்தில் தொடங்கி ரூ.5 லட்சத்தில் குழந்தையை விற்க பேரம் பேசி முடிக்கப்பட்டது. குழந்தையைக் காட்டுவதற்காக அந்த கும்பல் நேற்றுமுன்தினம் மாலை தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோயில் அருகே வந்துள்ளனர். அங்கு சென்ற தனிப்படை போலீஸார் அந்த கும்பலை மடக்கிப் பிடித்து, குழந்தையை மீட்டனர்.

குழந்தையின் தாயான கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியைசேர்ந்த கலைவாணர் மனைவி மாரீஸ்வரி (22), அவரது தாய் அய்யம்மாள் (40) மற்றும் தரகர்களான தூத்துக்குடி மில்லர்புரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைசேர்ந்த மாரியப்பன் (44), தூத்துக்குடி 3-ம் மைல் திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த சூரம்மா (75) ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட குழந்தை தூத்துக்குடியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் தாய் மாரீஸ்வரிக்கு, கலைவாணர் இரண்டாவது கணவர் ஆவார். குழந்தை பிறந்த சில நாட்களில் அவர் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மாரீஸ்வரிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இந்த குழந்தை குறைபிரசவத்தில் 8-வது மாதத்திலேயே பிறந்துள்ளது. மருத்துவமனையில் சிறிது காலம் வைத்து பராமரித்த பின்பு வீட்டுக்கு கொண்டு வந்த குழந்தையை, பணத்துக்காக விற்பனை செய்ய மாரீஸ்வரி முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் ஈரோடு பகுதியைச் சேர்ந்த மேலும் 2 தரகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT