க்ரைம்

ஆசிரியையிடம் சங்கிலி பறித்தவரை பைக்கில் துரத்தி பிடித்த காவலர்: விருதுநகர் எஸ்.பி. வெகுமதி அளித்து பாராட்டு

செய்திப்பிரிவு

சாத்தூர்: சாத்தூரில் ஆசிரியையிடம் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற இருவரை பைக்கில் துரத்திப் பிடித்த காவலருக்கு மாவட்ட எஸ்பி வெகுமதி அளித்து பாராட்டு தெரிவித்தார்.

சாத்தூர் எஸ்.ஆர். நாயுடு நகரைச் சேர்ந்தவர் விஜயராஜன். இவரது மனைவி அன்னலட்சுமி (40). சாத்தூர் அருகே தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை தனது மொபெட்டில் பள்ளிக்கு கிளம்பினார்.

சர்வீஸ் சாலையில் சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர் அன்ன லட்சுமி அணிருந்திருந்த 11 பவுன் சங்கிலியை பறித்தனர். அப்போது, சங்கிலியை ஆசிரியை அன்னலட்சுமி பிடித்துக் கொண்டார். சங்கிலியின் ஒரு பகுதி மட்டும் வழிப்பறி செய்தவர்கள் கையில் சிக்கியது. அன்னலட்சுமி கூச்சலிட்டதால் சங்கிலி பறித்த திருடர்கள் பைக்கில் வேகமாக தப்பிச்சென்றனர்.

மேலும், திருடர்கள் தப்பிச்சென்ற பைக்கை அன்னலட்சுமியும் துரத்திச்சென்றார். இதைப்பார்த்த போக்குவரத்து காவலர் சதீஷ்குமார் (34) என்பவர், உடனே தனது பைக்கில் சங்கிலி திருடியவர்களை துரத்திச்சென்று பூசாரிநாயக்கன்பட்டி விலக்கில் மடக்கிப் பிடித்தார். பின்னர், சாத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியும் அங்கு சென்று, சங்கிலி பறித்த இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் உசிலம்பட்டி அருகில் உள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (23) மற்றும் சிவகாசி சாட்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த அழகுராஜா (24) என்பது தெரிய வந்தது. அதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை துரத்திச்சென்று பிடித்த போக்குவரத்து காவலர் சதீஷ்குமாரை மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டுத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT