க்ரைம்

லண்டன் மாநாட்டிற்கு தேர்வானதாக மோசடி - என்ஐடி பேராசிரியரிடம் ரூ 5 லட்சம் பறித்த குஜராத் இளைஞர் கைது

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: லண்டன் மாநாட்டுக்கு தேர்வானதாக போலி இமெயில் அனுப்பி என்ஐடி பேராசிரியரிடம் ரூ. 5 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக குஜராத் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி பிராந்தியம் காரைக்கால் திருவட்டக்குடி என்ஐடி வளாகம் பேராசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45), என்ஐடி இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் மாநாட்டு ஏற்பாட்டு குழு அமைப்பாளர் என ஒருவர் அனுப்பியுள்ளார். பின்னர் லண்டனில் நடைபெற உள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் சம்பந்தமான மாநாட்டில் பங்கு கொள்ள பேராசிரியர் செந்தில் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஆணையை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து லண்டனில் தங்குவதற்காகவும் பயண செலவிற்காகவும் ரூ 5 லட்சத்து 33 ஆயிரத்து 640 அனுப்ப வேண்டும் என்றும், அவருடன் ஒருவரை அழைத்து வரலாம் என்றும் கூறியுள்ளார். இதற்கு முன் பல வெளியூர்களில் நடைபெறும் மாநாடுகளில் செந்தில்குமார் கலந்து கொண்டு இருப்பதால் அதை உண்மை என்று நம்பியுள்ளார். மேலும் அந்த நபர் கேட்ட பணத்தை அனுப்பி, தன்னுடைய விவரத்தையும், தன்னுடன் பணியாற்றும் பேராசிரியர் சங்கர் நாராயணன் என்பவர் விவரத்தையும் அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து செந்தில்குமாருக்கு விசா மற்றும் விமான பயண டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நாளில் செந்தில்குமாரும் அவரது நண்பர் சங்கர நாராயணனும் சென்னை சென்றுள்ளனர். ஏர்போர்ட்டில் அந்த பயண டிக்கெட் போலியானது என்று தெரிய வந்தது. இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், விசா உள்ளிட்ட அனைத்துமே போலியானது என்று தெரியவர தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த செந்தில்குமார் உடனே இது குறித்து சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையில் தனிப்படை குற்றவாளியை தேடி வந்தது. அப்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி யுவராஜ் சிங் (27) குஜராத்தில் இருந்தது தெரியவந்தது. புதுவை போலீஸார் குஜராத் போலீஸார் உதவியுடன் அவனை கைது செய்து புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின்னர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே குற்றவாளியை பிடித்த போலீஸார் குஜராத் ஜாம்நகர் சென்று அவன் பயன்படுத்திய செல்போன் சிம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வங்கியில் குற்றவாளியின் பெயரில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் பணம் மீட்கப்பட்டு நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்ட நபரான டாக்டர் செந்தில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT