தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை கோட்டை சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாடியம்மாள் (46). இவரது கணவர் தங்கராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், நாடியம்மாள் ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, வீட்டில் நியூட்ரீஷியன் சென்டர் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 13-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். இந்நிலையில், நியூட்ரீஷியன் சென்டரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நேற்று அவரது வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னையில் உள்ள நாடியம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த 40 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பாத்திரங்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் திருடுபோய் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தஞ்சாவூரிலிருந்து மோப்பநாய் டஃபி வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடி நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சென்னையில் இருந்து நாடியம்மாள் வந்த பிறகே திருட்டுப்போன பொருட்களின் முழு விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.