தென்காசி: தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரில் செயல்படும் தனியார் பள்ளியில், பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனம், தினமும் மாலையில் மாணவர்களை நாகல்குளத்தில் இறக்கி விட்டபின், இரவில் அதே கிராமத்தில் நிறுத்தப்படும். மீண்டும் மறுநாள் காலையில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
கடந்த வாரம் நாகல்குளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் பள்ளி வாகனத்தில் வைத்து 10 வயதுக்கு உட்பட்ட மாணவனுக்கு சிறுவர்கள் சிலர் ஒருவகை போதை பொருளை வலுக்கட்டாயமாக கொடுத்து வாயில் வைத்து சுவைக்குமாறு கூறுகின்றனர். அந்த மாணவனும் அவர்களுக்கு அஞ்சி அதை சுவைக்கிறான். இதை செல்போனில் வீடியோ பதிவு செய்த அந்த சிறுவர்கள் அதை பரவவிட்டனர். சமூக வலைதளங்கள் மூலம் நேற்று அந்த வீடியோ தென்காசி வட்டாரங்களில் வேகமாகப் பரவியது. பாவூர்சத்திரம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நாகல்குளம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் 3 பேர், பள்ளி மாணவனுக்கு கட்டாயப்படுத்தி போதைப் பொருளை கொடுத்து பயன்படுத்தச் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர்.