க்ரைம்

சேலம் | கைதிக்கு கஞ்சா, செல்போன் கொடுத்த ஆயுதப்படை போலீஸ் ஏட்டு தற்காலிக பணி நீக்கம்

செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் கைதிக்கு கஞ்சா, செல்போன் கொடுத்து உதவிய ஆயுதப்படை போலீஸ் ஏட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரவுடி சேட்டு என்ற மணிகண்டன். இவரை போலீஸார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த மணிகண்டனுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் சேலம் மாநகர ஆயுதப்படை ஏட்டு மணி இருந்தார். இவர், ரூ.25 ஆயிரம் கையூட்டு பெற்றுக் கொண்டு மணிகண்டனுக்கு செல்போன், கஞ்சா, சாப்பாடு உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்து கொடுத்ததாக சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக காவல் துணை ஆணையர் லாவண்யா, டவுன் காவல் உதவி ஆணையர் வெங்கடேசன் விசாரணை நடத்தியதில், கையூட்டு பெற்றுக் கொண்டு கைதிக்கு உதவியது தெரியவந்தது. இதையடுத்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் நஜ்முல்ஹோடாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆயுதப்படை போலீஸ் ஏட்டு மணியை தற்காலிக பணி நீக்கம் செய்து, மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT