திருச்சி: திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை தபோவனம் எதிரே முட்புதரில் கடந்த 8-ம் தேதி, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கிடந்தது. தகவலறிந்த ஜீயபுரம் போலீஸார் மற்றும் சமூக நலத் துறை அதிகாரிகள் அங்கு சென்று துணியால் மூடப்பட்டிருந்த அந்தக் குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில், அந்தக் குழந்தை, கல்லூரி மாணவி ஒருவருக்கு கூடாநட்பில் பிறந்தது என தெரியவந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாணவியிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்திருந்தனர்.
இந்தநிலையில், அந்த மாணவி அவரது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த மாணவி எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.