க்ரைம்

நாகை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சமூக நலத் துறை புகாரில் பேராசிரியர் கைது

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் தொடர்பாக பேராசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் புத்தூரில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. இங்கு, வெளிப்பாளையத்தைச் சேர்ந்தசதீஷ்(35) என்பவர் உடற்குறியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர், கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வரும் 22 வயது மாணவியிடம் பாலியல் ரீதியாக தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த உரையாடல், சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து, நேற்று முன்தினம் தகவலறிந்த நாகை ஆட்சியர் அருண்தம்புராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிசாவை விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் 2 அலுவலர்கள் நேற்று முன்தினம் புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரிக்குச் சென்று கல்லூரி பேராசிரியர் சதீஷ் மற்றும் பிற பேராசிரியர்கள், கல்லூரி செயலர், கல்லூரி தாளாளர், மாணவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி எழுதி வாங்கினர்.

இதையடுத்து, விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர். மேலும், சமூக வலைதளங்களில் வெளியான உரையாடல் பதிவு, பேராசிரியர் சதீஷின் குரல் என்பது உறுதியானதையடுத்து, மாவட்ட சமூகநலத் துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நாகை நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷை நேற்று மாலை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT