க்ரைம்

காட்பாடி இளைஞர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க பெங்களூரு, சித்தூர் விரைந்தது தனிப்படை

செய்திப்பிரிவு

வேலூர்: காட்பாடி அருகே கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோத தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 பேரை பிடிக்க தனிப்படை காவலர்கள் பெங்களூரு, சித்தூர் விரைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள செங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (22). பாலிடெக்னிக் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக வெங்கடேசனின் தாயார் பாரதி என்பவர் தனது மகனை கண்டுபிடித்து கொடுக்குமாறு காட்பாடி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகாரளித்தார். அதன்பேரில், காட்பாடி காவல் துறையினர் விசாரணையை தொடங்கியதுடன் சந்தேகத்தின்பேரில் பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சதீஷ், திவாகர் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அதில், கஞ்சா விற்பனையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் ஏற்பட்ட முன் விரோதத்தால் மதுபானம் குடிக்க அழைத்துச் சென்று வெங்கடேசனை கொலை செய்ததாகவும், அவரது உடலை செங்குட்டை அருகே கசம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடம் ஒன்றின் அருகில் புதைத்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் முன்னிலையில் வெங்கடேசனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

3 தனிப்படை அமைப்பு: இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அந்தோணி, கரிகிரி கிராமத்தைச் சேர்ந்த மணி, சூர்யா ஆகியோரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டன. இவர்கள், பெங்களூரு, சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினர் தேடுதலை தீவீரப்படுத்தியதால் கரிகிரி மணி என்பவர் வேலூர் ஜே.எம் 1-வது மாஜிஸ்திரேட் பத்மகுமாரி முன்னிலையில் நேற்று சரணடைந்தார். தலைமறைவாக உள்ள அந்தோணி, சூர்யாவை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘கஞ்சா விற்பனை செய்வதில் இவர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். கரிகிரி மணிக்கு வெங்கடேசன் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக் கேட்டபோது சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, விருதம்பட்டு ஆட்களை வைத்து மணியை கொலை செய்யப்போவதாக வெங்கடேசன் மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மணி உள்ளிட்டோர் வெங்கடேசனை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக, மதுபானம் அருந்த அழைத்துச் சென்ற நிலையில் திங்கட்கிழமை பிற்பகல் வெங்கடேசனை கொலை செய்ததுடன், அதை வீடியோவாக தங்கள் செல்போனில் படமெடுத்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT