ஆலங்காயம்: வாணியம்பாடி அருகே நிலத் தகராறில் விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் 16 வயது சிறுவன் நேற்று சரணடைந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராமமூர்த்தி (62). இவருக்கு நன்னேரி கிராமத்தில் 3.60 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில், இவருக்கும், பக்கத்து நிலத்துக்காரரான வெங்கடாச்சலம் என்பவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ராமமூர்த்தி குடும்பத் தாருக்கும், வெங்கடாச்சலம் குடும் பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு, சண்டை ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ராம மூர்த்திக்கு சாதகமாக வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், வெங்கடாச்சலம் குடும்பத்தாரின் பகை மேலும் அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்துக்கு சென்ற ராமமூர்த்தி மீது வெங்கடாச்சலம் குடும்பத்தைச் சேர்ந்த மூர்த்தி, முரளி, லோகநாதன் அவர்களது ஆதரவாளர் மகேந்திரன் ஆகியோர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில், பலத்த காயமடைந்த ராமமூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பினார்.
இது தொடர்பாக ஆலங்காயம் காவல் நிலையத்தில் ராமமூர்த்தி புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், வெங்கடாச்சலம் குடும்பத்தில் சிலர் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் தனக்கு சொந்தமான 3.60 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கின் தீர்ப்பு தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், தன்னை கொலை செய்ய கூலியாட்களை ஏவி விட் டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து தனக்கும், தனது குடும்பத் தாருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அவர் அளித்த மனு மீது ஆலங்காயம் காவல் துறை யினர் எந்த ஒரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை எனக்கூறப் படுகிறது. இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் ராமமூர்த்தி தனது விவசாய நிலத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, அங்கு வந்த கூலிப்படையைச் சேர்ந்த சிலர், ராமமூர்த்தியை வழிமறித்து கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த விவசாயி ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே, கூலிப்படையைச் சேர்ந்த வர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இது குறித்து தகவலறிந்த வாணி யம்பாடி துணை காவல் கண் காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில், காவல் ஆய் வாளர்கள் பழனி (ஆலங்காயம்), நாகராஜன் (வாணியம்பாடி டவுன்), அருண்குமார் (வாணி யம்பாடி கிராமியம்), ஜெய லட்சுமி (மகளிர்) மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றிய காவல் துறை யினர் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆலங்காயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில், கொலை தொடர்பாக திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் 16 வய துள்ள சிறுவன் ஒருவர் நேற்று சரணடைந்துள்ளார். அவரிடம், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய கூலிப்படை குறித்தும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.