சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், சென்ட்ரல் ஆர்பிஎஃப் ஆய்வாளர்ரோகித்குமார் ஆகியோர் தலைமையிலான போலீஸார்பயணிகளை நேற்று முன்தினம் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் இருந்து வந்த ரயிலிலிருந்து இறங்கிய இளைஞர் கொண்டுவந்த பையை சோதித்தபோது அதில் கட்டுக்கட்டாக ரொக்கம், தங்கம், வைர ஆபரணங்கள் இருந்தன.
இதையடுத்து, அவரை விசாரித்தபோது, அவர் ஆந்திரமாநிலம் ரேபள்ளியைச் சேர்ந்த கோபால் (27) என்பதும்,கூடூரில் இருந்து ரயிலில் சென்னைக்கு வந்ததும் தெரியவந்தது. ரூ.40 லட்சம் ஹவாலா பணமும், ரூ.62 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும் இருந்தன. அவரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லை. இதையடுத்து, அவரை வருமானவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வருமான வரித் துறை அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.