கோவை: கோவை வெள்ளலூர் எல்.ஜி நகர் 3-வது பிரிவைச் சேர்ந்தவர் நிஷாந்த் (30). இவர், நேற்று முன்தினம் கோவை மாநகர காவல்துறையின், சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், ‘‘பகுதி நேர வேலை தேடி வந்த நான், எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்த லிங்க்-கில், இ-பே இணையதள பக்கத்துக்குச் சென்று பார்வையிட்டேன். அதில் பணத்தை முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை நம்பிய நான் அதில் கூறப்பட்டிருந்த வங்கிக் கணக்கு எண்ணுக்கு, பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.7 லட்சத்து 13 ஆயிரத்து 724 தொகையை அனுப்பினேன். ஆனால், கூறியபடி எனக்கு லாபத் தொகை எதுவும் வரவில்லை. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து, அடையாளம் தெரியாத மர்மநபர் மீது மோசடி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.