க்ரைம்

50+ நாய்களை அடித்து கொன்றாரா? - விருதுநகர் அருகே ஊராட்சித் தலைவர், கணவர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகர் அருகே கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்களை பிடித்து அடித்துக் கொன்றதாக ஊராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில், கடந்த 3 நாட்களாக வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்களை சங்கரலிங்கபுரம் ஊராட்சித் தலைவர் நாகலட்சுமி உத்தரவின்பேரில், ஊராட்சி பணியாளர்கள் பிடித்து அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான சுனிதா என்பவர் நாகலட்சுமியை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் பதில் கூறியுள்ளார்.

அப்போது நாய்களை பிடித்து கொன்றதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் சுனிதா கொடுத்த புகாரின்பேரில், ஓ.சங்கரலிங்கபுரம் ஊராட்சித் தலைவர் நாகலட்சுமி, அவரது கணவர் மீனாட்சிசுந்தரம் மற்றும் தெருநாய்களை அடித்துக் கொன்ற சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT