திருச்சி: முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் நேற்று மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி புத்தூரில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நடன கேளிக்கை விடுதிக்கு அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து, திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் டிச.1-ம் தேதி புத்தூர் நான்கு சாலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, முதல்வர் குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புத்தூர் அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் உட்பட 9 பேரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நேற்று நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களில் 7 பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நவ.4-ம் தேதி புத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அப்போது, அங்கு பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்களை அவதூறாக பேசி கைகளால் அடித்து தள்ளிவிட்டது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் ராஜசேகரன் உள்ளிட்ட பாஜகவினர் மீது கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
அந்த வழக்கில் ராஜசேகரனை கைது செய்வதற்கு ஜே.எம்.2 நீதிமன்றம் வழங்கிய உத்தரவு கடிதத்தை கன்டோன்மென்ட் போலீஸார் நேற்று மத்திய சிறையில் ஒப்படைத்தனர். இதன் மூலம், ராஜசேகரன் மேலும் ஒரு வழக்கில் கைதாகியுள்ளதால், ஏற்கெனவே வழங்கப்பட்ட ஜாமீனில் அவர் சிறையிலிருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.