பெரியபாளையம் அருகே ஆவாஜிபேட்டையில் கிடைத்த ராக்கெட் குண்டை போலீஸார் மீட்டு, மைதானத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி அதன் மையத்தில் பத்திரமாக வைத்துள்ளனர். 
க்ரைம்

திருவள்ளூர் | ராக்கெட் லாஞ்சரை தொடர்ந்து மீண்டும் ஒரு இரும்பு குண்டு கண்டெடுப்பு: பழைய இரும்பு கடையில் விற்க முயன்ற தொழிலாளி

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே 2 தினங்களுக்கு முன்பு ராக்கெட் லாஞ்சர் கண்டெடுத்த நிலையில் தற்போது ஆவாஜிபேட்டை பகுதியில் பழமையான ராக்கெட் குண்டு ஒன்று கிடைத்துள்ளது. இதனை கண்டெடுத்த தொழிலாளி பழைய இரும்பு கடையில் விற்க முயன்றுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள ஆவாஜிபேட்டை - மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் குப்பன். கூலி தொழிலாளியான இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தன் மாடுகளை கட்டி வைப்பதற்கு கம்பு நடுவதற்காக வீட்டின் அருகே கடப்பாரையால் நிலத்தில் துளையிட்டார்.

அப்போது, வித்தியாசமான சப்தம் கேட்டதால், குப்பன் அந்த நிலத்தை தோண்டிப் பார்த்த போது, பழமையான இரும்புக் குண்டு ஒன்று இருந்தது. அதனை குண்டு என அறியாத குப்பன், பழைய இரும்பு கடைக்கு எடுத்துச் சென்று விற்க முயன்றார். ஆனால், கடைக்காரர் அதனை வாங்க மறுத்துள்ளார். இதையடுத்து, அந்த இரும்பு குண்டை குப்பன் தன் வீட்டிலேயே வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வில் ஈடுபட்டனர். முதல்கட்ட ஆய்வில், அந்த குண்டு பழமையான ராக்கெட் குண்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார், அந்த ராக்கெட் குண்டை மீட்டு, அப்பகுதியில் உள்ள மைதானத்துக்கு கொண்டு சென்று, மணல் மூட்டைகளை அடுக்கி அதன் மையத்தில் பத்திரமாக வைத்தனர்.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இன்று பரிசோதனையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அந்த பரிசோதனையில்தான் ராக்கெட் குண்டு எந்த வகையைச் சேர்ந்தது, எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பன உள்ளிட்ட விபரங்கள் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2-ம் தேதி ஆவாஜிபேட்டைக்கு அருகே மாளந்தூர் கிராமத்தில் நூறுநாள் வேலை திட்ட பணியின்போது நிலத்தில் பள்ளம் தோண்டியதில் ராக்கெட் லாஞ்சர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT