க்ரைம்

பெண்கள் பள்ளி விடும் நேரத்தில் காலாப்பட்டில் நடுரோட்டில் தண்டால் எடுத்த இளைஞர் - போலீஸ் விசாரிக்க முடிவு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பள்ளி விடும் நேரத்தில், மாணவிகளுக்காக நடுரோட்டில் இளைஞர் ஒருவர் தண்டால் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்லும் மாணவிகளை வட்டமிடும் இளவட்ட ரோமியோக்களின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அடுத்துள்ள காலாப்பட்டு பகுதியில் பள்ளி விடும் நேரத்தில் மாணவிகளை கவரும் விதமாக, இளைஞர் ஒருவர் நடுரோட்டில் தண்டால் எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் எம்.ஓ.எச் பரூக் மரைக்காயர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாலை பள்ளி விடும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மாணவிகளின் முன்னிலையில் தலையில் ஹெல்மெட்டுடன் நடந்து செல் கிறார்.

உடனே அவர் சாலையின் நடுவே அமருகிறார். தொடர்ந்து அவர் நடுரோட்டிலேயே தண்டால் எடுக்கிறார். சாலையில் வரும் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களையும் பொருட்படுத்தாத அந்த இளைஞர் கூலாக இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்.

பின்னர் சில மணி துளிகளில் அந்த இளைஞர் அங்கிருந்து மெதுவாக எழுந்து செல்கிறார். இளைஞரின் இத்தகு செயல் பெற்றோர், பொதுமக்களுக்கு எரிச்சலை ஊட்டியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக காலாப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காலாப்பட்டு போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘நடுரோட்டில் இளைஞர் ஒருவர் தண்டால் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. இருப்பினும் அந்த இளைஞர் யார்? எதற்காக இதுபோன்று ஈடுபட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் ’’ என்றனர்.

SCROLL FOR NEXT