க்ரைம்

திருச்சி | மர அறுவை மில்லுக்கு திருட வந்ததாக நினைத்து பொறியியல் பட்டதாரி அடித்துக் கொலை

செய்திப்பிரிவு

திருச்சி: மணிகண்டம் அருகே மர அறுவை மில்லில் திருட வந்ததாக நினைத்து பொறியியல் பட்டதாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருச்சி சஞ்சீவி நகர் ஏ.ஆர்.கே நகரைச் சேர்ந்தவர் திரேந்தர் (42). இவர் மணிகண்டம் பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகிறார். இங்குள்ள வேப்ப மரம் ஒன்றில், உடல் முழுவதும் காயங்களுடன் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்து கிடந்தார்.

தகவலறிந்த மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீஸார் அங்குசென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக அந்த மர அறுவை மில்லில் பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது: உயிரிழந்து கிடந்தவர், துவாக்குடி வாண்டையார் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் சக்கரவர்த்தி(33) எனத் தெரிய வந்துள்ளது. பொறியியல் பட்டதாரியான இவர், மதுப்பழக்கத்துக்கு அடிமையானதால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீள சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தச் சூழலில், மணிகண்டத்திலுள்ள மர அறுவை மில்லில் உடல் முழுவதும் காயங்களுடன் அவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

அங்கிருந்த ஊழியர்களைப் பிடித்து விசாரித்தபோது, மர அறுவை மில்லுக்கு வந்த சக்கரவர்த்தி, மில் உரிமையாளரான திரேந்தரின் செல்போனை திருடிக் கொண்டு தப்ப முயன்றதாகவும், அப்போது விரட்டிப் பிடித்து செல்போனை பறிமுதல் செய்தபின், எச்சரித்து விடுவித்துவிட்டதாகவும் கூறினர்.

அதன்பிறகு, அவர் அன்றிரவு மீண்டும் அவர் அங்கு வந்ததால், திருட வந்ததாக கருதி, அவரைப் பிடித்து, அங்குள்ள வேப்ப மரத்தில் கட்டிவைத்து தாக்கியதாகவும், பின்னர் நேற்று காலையில் பார்த்தபோது சக்கரவர்த்தி இறந்துவிட்டது தெரியவந்ததாகவும் மர அறுவை மில் ஊழியர்கள் தெரிவித்தனர். மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சக்கரவர்த்தி திருடுவதற்காக அங்கு வந்தாரா, கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என விசாரித்து வருகிறோம் என்றனர்.

SCROLL FOR NEXT