திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடுபுரம் பகுதி மருந்துக்கடையில், பிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு ஒரே சிரஞ்சில் மருந்துகள் செலுத்தி சிகிச்சை அளித்த போலி பெண் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் குப்புசாமிநாயுடுபுரத்தில் "ஜெய் மெடிக்கல்ஸ்" என்ற பெயரில் மருந்தகம் இயங்கி வந்தது. இங்கு போலி மருத்துவர் சிகிச்சை அளிப்பதாக, மாவட்ட சுகாதார நலப்பணி துறையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கனகராணி தலைமையில், தேசிய நல குழுமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருண்பாபு, பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுடர்விழி, மாவட்ட சுகாதார துறை நிர்வாக அலுவலர் முருகேசன், அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் அந்த மருந்து விற்பனை கடையில் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த கோகிலா என்பவர் மருந்து கடையின் பின்புறம் தனி அறையில் நோயாளிகளுக்கு, ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது. மருத்துவ ஆய்வு குழுவினரிடம் முதலில் அவர் தன்னை மருத்துவர் என கூறி அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், குப்புசாமிநாயுடுபுரம் லட்சுமி மில்ஸ் பகுதியை சேர்ந்த சின்னராசு மனைவி கோகிலா (30) என்பதும் அவர் மருத்துவம் சம்பந்தமான எந்த படிப்பும் படிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. பிளஸ் 2 மட்டுமே முடித்த நிலையில் இந்த தொழிலில் கடந்த 8 ஆண்டுகள் வரை ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினர் கூறியது: "மருந்து கடைக்கு வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவதும், காயங்களுடன் வருபவர்களுக்கு கட்டுப்போட்டு விடுவதும், மருந்துகளை கொடுப்பதையும் செய்து வந்துள்ளார். சிறிய அளவிலான மருத்துவமனை நடத்த வேண்டும் என்றாலும், அதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும். உரிய அனுமதி இன்றி, கல்வித் தகுதி இன்றி ஆங்கில மருந்துகளை கொண்டு அலோபதி மருத்துவம் பார்த்துள்ளார். அதே போல் ஒரே சிரஞ்சில் பலருக்கும் ஊசிகளை மட்டும் ஊசி போட்டுள்ளார். இது மிகவும் ஆபத்தான விஷயமாகும். குறைந்த கட்டணத்தில் சிகிச்சை என்பதால், மக்களும் ஆபத்தை உணராமல் சிகிச்சை எடுத்துள்ளனர். இதனால் நோய்த்தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம். மருத்துவமனையின் பின்புறம் 700 ஊசிகளுக்கு மேல் கைப்பற்றினோம். ஆனால் சிரஞ்சுகள் இல்லை" என்று குழுவினர் கூறினார்.
இதையடுத்து போலி மருத்துவர் கோகிலா மீது பல்லடம் போலீஸாரிடம், தேசிய நல குழுமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருண்பாபு புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து போலீசார் கோகிலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தனியார் மருந்து விற்பனை கடையை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் 3 நாட்களுக்கு முன்பு, மூல நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெண் மருத்துவர் ஒருவர் அதே பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.