க்ரைம்

திருச்சி | சிறார்களின் ஆபாச வீடியோக்கள் விவகாரம்: மணப்பாறை பட்டதாரி மீது சிபிஐ வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (45). எம்பிஏ பட்டதாரி. இவர்,கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணக்கு பிரிவில் பணியாற்றியவர். தற்போது திருப்பூர் ஆலைகளில் இருந்து துணிகளை வாங்கி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், டெல்லி மற்றும் சென்னையிலிருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர், தமிழக போலீஸாரின் உதவியுடன் ராஜா வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சிறார்களின் ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி லட்சக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடைபெற்றதால், அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், ராஜா பயன்படுத்திய கணினி, லேப்டாப், ஹார்டுடிஸ்க், செல்போன்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, திருச்சிக்கு நேற்று ராஜாவை வரவழைத்த சிபிஐ அதிகாரிகள், அவரிடம் 2-வதுநாளாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன், கணினி பறிமுதல்: இதுதொடர்பாக சிபிஐ வட்டாரத்தில் கூறும்போது, ‘‘சிறார்களின் ஆபாச வீடியோக்களை ஜெர்மனுக்கு ராஜா அனுப்பியதாக, அந்நாட்டில் உள்ள இன்டர்போல் அமைப்பு மூலம் தகவல்கள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து, ராஜா வீட்டில் சோதனை நடத்தி,அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், கணினி மற்றும் ஹார்ட்டிஸ்குகள் போன்றவற்றில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.

SCROLL FOR NEXT