கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே தனியார் நிறுவன பொறியாளரிடம் நூதன முறையில் ரூ.39 லட்சத்து 73 ஆயிரத்து 444 மோசடி செய்தது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா முத்தூர் அருகே உள்ள கொரனூரைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (33). பொறியியல் கல்வி பயின்றுள்ள இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வடிவமைப்பு பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 12-ம் தேதி, இவரது இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வந்தது. அதில், வீணா என பெயர் குறிப்பிட்டு, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
இதனை நம்பிய அவர் அதில் கூறப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் கூறிய 4 வங்கி கணக்குகளுக்கு ரூ.39 லட்சத்து 73 ஆயிரத்து 444-யை அனுப்பி வைத்தார். மஞ்சுநாத் பணம் அனுப்பிய பிறகு எவ்வித தகவலும் வரவில்லை.
முதலில் பேசிய செல்போன் எண்ணுக்கு மஞ்சுநாத் தொடர்பு கொண்டபோது, அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மஞ்சுநாத், இதுதொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீ ஸில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.