சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி, 1920 முதல் இயங்கிவருகிறது. ஆசியாவிலேயே உடற்கல்விக்கான முதல் கல்லூரி இதுவாகும். இக்கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி வளாகத்திலேயே தங்கும் விடுதியும் உள்ளது.
கல்லூரி முதல்வராக உள்ள ஜார்ஜ் ஆபிரகாம் மீது, முதுநிலை படிக்கும் மாணவி ஒருவர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கல்லூரி முதல்வர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: உடற்கல்வியியல் கல்லூரி விடுதியில் தங்கிபயிற்சி மேற்கொண்டு வரும் முதுநிலை மாணவிக்கு உதவி செய்வதுபோல பேசி, மாணவியின் செல்போன் எண்ணை கல்லூரி முதல்வர் பெற்றுள்ளார்.
அதன்பின், அந்த மாணவிக்கு வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில் விளையாட்டு பயிற்சி,உயர் வாய்ப்பு தொடர்பாக உதவி செய்வதாக கூறி ஆசைக்கு இணங்கும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. ஆபாச குறுஞ் செய்திகளையும் அனுப்பினாராம்.
இதையடுத்து, கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது மாணவி புகார் அளித்தார். அதன்படி, விசாரணை நடத்தினோம். முதல்கட்டமாக, மாணவியின் செல்போனை ஆய்வுசெய்தோம். அதில், மாணவியிடம் அத்துமீறலுக்கான முகாந்திரம் உள்ளதால் முதல்கட்டமாக ஜார்ஜ் ஆபிரகாம் மீது பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிந்துள்ளோம்.
சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையர் கிறிஸ்டின் ஜெயசீல், கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து விசாரணைநடக்கிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.