க்ரைம்

தாம்பரம் | இளைஞரை திருமணம் செய்து நகை, பணத்துடன் பெண் மாயம்: இதே பாணியில் 4 பேரிடம் மோசடி

செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரத்தில் இளைஞரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓடிய பெண், இதே பாணியில் 4 பேரிடம் திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன். தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்த அபிநயா என்கிற கயல்விழியை காதலித்தார். பின்னர் இருவரும் கடந்த ஆக. 29-ம் தேதி ரங்கநாதபுரம் பெருமாள் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த அக்.19-ம் தேதி வீட்டில் இருந்த 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம், பட்டுப் புடவைகளுடன் அபிநயா மாயமானார். புகாரின் பேரில் தாம்பரம் போலீஸார் வழக்குப் பதிந்து செம்மஞ்சேரி- பழைய மாமல்லபுரம் சாலையில் விடுதியில் தங்கி இருந்த அபிநயாவை கைது செய்தனர்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுவதாவது: அபிநயாவுக்கு கடந்த 2011-ம் ஆண்டு மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞருடன் அபிநயாவுக்கு முதலில் திருமணம் நடந்தது. 10 நாட்களிலேயே அவரை பிரிந்து, மதுரையைச் சேர்ந்த செந்தில்குமாரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 8 வயதில் மகன் உள்ளார்.

பிறகு, மதுரையிலிருந்தும் மாயமாகி, கேளம்பாக்கத்தில் ஒரு இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து, அவரையும் உதறிவிட்டு ஊரப்பாக்கத்தில் தங்கி இருந்தபோது நடராஜனை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து நகை பணத்துடன் மாயமாகியுள்ளார்.

அபிநயா பணிக்காக ஒவ்வொரு இடங்களில் தங்கும்போதும் அறிமுகமாகும் இளைஞர்களை திருமணம் செய்து, நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளார். திருடிய நகை, பணத்தை 2-வது கணவர் செந்தில்குமாரிடம் கொடுத்து ஆடம்பர செலவு செய்துள்ளார். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபிநயாவுக்கு உடந்தையாக இருந்த செந்தில்குமாரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT