மும்பை: தென்கொரியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், யூட்யூபில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்காக மும்பை புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பெண் அருகில் வந்த இளைஞர் ஒருவர், கையைப் பிடித்து இழுக்க முயற்சித்தார். இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, அந்த இடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார். பின்னர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை இடைமறிந்த இளைஞர், மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறினார். அதற்கு அந்தப் பெண் மறுத்துவிட்டார்.
இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவியது. இதைப் பகிர்ந்தவர்கள், மும்பை காவல் துறையை டேக் செய்து, இந்தியா வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இதன் அடிப்படையில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதையறிந்த தென்கொரிய பெண் மும்பை போலீஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.