திருச்சி: சிறார்களின் ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதித்ததாக, மணப்பாறையைச் சேர்ந்தவரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டிலிருந்து கம்ப்யூட்டர், லேப்டாப், ஹார்டு டிஸ்க் மற்றும் செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (45). எம்பிஏ பட்டதாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணக்கு பிரிவில் பணியாற்றினார்.
பின்னர் அங்கிருந்து நாடு திரும்பிய அவர், திருப்பூரில் தொழில் செய்து வந்தார். அதன்பின், துணி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில், டெல்லி மற்றும் சென்னையிலிருந்து வந்த சிபிஐ அயலகப் பிரிவு குழுவினர் 6 பேர் நேற்று காலை 6.45 மணியளவில் ராஜாவின் வீட்டுக்குள் புகுந்து திடீர் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டின் அனைத்து கதவு, ஜன்னல்களை சாத்திக் கொண்டு, ராஜாவிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சோதனை இரவு 8 மணிக்குப் பிறகும் நீடித்தது. சோதனையின்போது, ராஜா பயன்படுத்திய கம்ப்யூட்டர், லேப்டாப், ஹார்டு டிஸ்க், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சிபிஐ வட்டாரத்தில் கூறும்போது, ‘‘ராஜா கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறார்களின் ஆபாச வீடியோக்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார்’’ என்றனர்.