சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜீவா நகர் மற்றும் பாரதி நகர் இளைஞர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதை ஊர்த்தலைவர் என்ற முறையில், அப்பகுதி அதிமுக வட்டச் செயலாளராக இருந்த பாஸ்கரன் தட்டிக் கேட்டு எச்சரித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பாரதி நகரைச் சேர்ந்த முருகன் (32) என்பவர், கடந்த 2013 பிப்.14-ம் தேதி கட்சி அலுவலகத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பாஸ்கரனை படுகொலை செய்தார். இதுதொடர்பாக பாஸ்கரன் மகன் ரமேஷ் அளித்த புகாரின்பேரில் ஆர்.கே.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.தேவி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.சுரேஷ் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டுள்ள முருகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.