அப்தாப் | கோப்புப்படம் 
க்ரைம்

பாலிகிராப் சோதனையின் போது கொலை செய்ததை ஒப்புக் கொண்ட அப்தாப்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் இளம்பெண் ஷிரத்தாவை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்தாப் பூனாவாலாவுக்கு பாலிகிராப் சோதனை நேற்று நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது, ஷிரத்தாவை கொலை செய்ததை அப்தாப் ஒப்புக் கொண்டதாகவும், கொலைக்காக வருத்தம் எதுவும் இல்லை என்று கூறியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

எனினும், பாலிகிராப் அல்லது உண்மை கண்டறியும் சோதனை யில் குற்றம் சாட்டப்பட்டவர் சொல்லும் தகவல்களை வைத்து அவற்றை சட்டப்பூர்வமாக ஆதாரமாக எடுத்துக் கொள்ளவோ அல்லது அவருக்கு தண்டனை பெற்றுத்தரவோ முடியாது. ஆனால், குற்ற வழக்கில் வேறுஆதாரங்களை கண்டறிவதற்கு உதவியாக இருக்கும்.

இந்நிலையில், டெல்லியின் ரோஹினி பகுதியில் உள்ள ஆய்வகத்தில் இன்று மற்றும் டிசம்பர் 5-ம் தேதிகளில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்படும். அப்போது மயக்க நிலைக்கு படிப்படியாக அப்தாப் செல்லும்போது, கேள்விகள் முன் வைக்கப்படும். அவர் தன்னிலை மறந்த நிலையில் சொல்லும் தகவல்களை வைத்து, விசாரணை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT