திருப்பூர்: திருப்பூரில் சிறுவனை கடத்திச் சென்று அவரிடமிருந்த செல்போனையும், பணத்தையும் பறித்துச் சென்ற 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த 27-ம் தேதி இரவு சாமுண்டிபுரத்தில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். திடீரென வழிமறித்த3 பேர், சிறுவனிடம் கத்தியை காட்டி மிரட்டி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றனர். சிறுவனை கட்டி வைத்து தாக்கியதோடு, செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர்.
சிறுவன் சத்தமிட்டதால், அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டுச் சென்றனர். வீட்டுக்கு வந்த சிறுவன், பெற்றோரிடம் நடந்ததை கூறினார். இதையடுத்து, வேலம்பாளையம் போலீஸாரிடம் பெற்றோர்புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்தனர். இது தொடர்பாக சூர்யா (24), கோகுல், நவீன்குமார் (24) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.