க்ரைம்

ஸ்ரீவில்லிபுத்தூர் | பட்டா வழங்காததால் விஏஓ அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர் கைது

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆவின் பாலகம் அமைக்க பட்டா தராததால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு போட்ட முகமது உசேன் (45) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மகாராஜபுரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது உசேன் (45). இவர் 8 மாதங்களுக்கு முன் மாவூத்து விலக்கு பிள்ளையார்கோயில் அருகில் ஆவின் விற்பனை கடை அமைக்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமாரிடம் அந்த இடத்திற்கு பட்டா வழங்குமாறு முகமது உசேன் கேட்டுள்ளார். அதற்கு, பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர்தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் முகமது உசேன் இன்று அதிகாலை மகாராஜபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு போட்டு விட்டு வாசலில் ஆவின் கடை போர்டு வைத்துவிட்டுச் சென்றார்.

காலை வழக்கம் போல் பணிக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் (VAO) கிருஷ்ணகுமார் அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் வத்திராயிருப்பு போலீசில் புகார் அளித்தார். அரசு அலுவலகத்திற்கு பூட்டு போட்டது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து முகமது உசேனை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT