க்ரைம்

சென்னை | ஆங்கில மீடியத்தில் படித்துவிட்டு தமிழ் இலக்கியம் படிப்பில் சேர்ந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

செய்திப்பிரிவு

சென்னை: ஆவடியில் தமிழ் இலக்கியம் பயின்றுவந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆவடி அருகே கோயில் பதாகை, மசூதி தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பூபதி (45). இவரது மனைவி மகாலட்சுமி (38). இவர்களுக்கு திவ்யா (17), தீபா (17) ஆகிய இரட்டை மகள்கள் உள்ளனர். இவர்களில் திவ்யா, அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார்.

தீபா பட்டாபிராமில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் இலக்கியம் முதலாமாண்டு படித்து வந்தார். குறைந்த மதிப்பெண் பெற்றதால் கல்லூரியில் அவர் கேட்ட பாடப்பிரிவு கிடைக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து கிடைத்த பாடப்பிரிவான தமிழ் இலக்கியத்தை படித்து வந்துள்ளார்.

படிப்பதில் சிரமம்: இதைப் படிப்பதற்கு அவர் சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மகாலட்சுமியும், திவ்யாவும் செல்போனை சரி செய்வதற்காக ஆவடிக்கு சென்றுவிட்டனர். மேலும் வீட்டிலிருந்து பூபதியும் வெளியே சென்றுவிட்டார்.

வீட்டில் தனியாக இருந்த தீபா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீபாவை மீட்டு, ஆவடியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

முதலுதவிக்கு பிறகு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு தீபா உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். பள்ளிப் படிப்பை ஆங்கிலத்தில் முடித்துவிட்டு, கல்லூரியில் தமிழில் படிக்க முடியாததால் தீபா தீக்குளித்தாரா? அல்லது தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT