ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலம் கட்னி நகர காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.கே. ஜெயின் கூறியதாவது.
கட்னியின் பார்கவான் பகுதியில் தங்கத்தை அடமானம் பெற்று கடன் வழங்கும் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவன கிளைக்குள் காலை 10.30 மணியளவில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள், ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி லாக்கர்களை திறந்து 16 கிலோ தங்க நகைகள் மற்றும் 25 லட்ச ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பியுள்ளனர்.
அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கொள்ளையர்கள் அனைவரும் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து வந்துள்ளனர். தங்க நகைக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வங்கி ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பைக்கை கொள்ளையர்கள் வங்கியிலிருந்து தப்பிச் செல்ல பயன்படுத்தியுள்ளனர்.
சுமார் 22 முதல் 25 வயதுடைய 5-6 நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே,குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர். இவ்வாறு அவர் கூறினார்.