கொச்சி: துபாயை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) அப்துல் லஹிர் ஹாசன். தொழிலதிபரான இவர் தனது மகளை கடந்த 2017-ம் ஆண்டு, கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த முகம்மது ஹபீஸ் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தார். இந்நிலையில் மருமகன் மீது தொழிலதிபர் ஹாசன், எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா காவல் நிலையத்தில் 3 மாதத்துக்கு முன் புகார் அளித்தார்.
அவர் தனது புகாரில், “எனது மகளுக்கு பரிசாக அளித்த 1,000 பவுன் தங்க நகைகள் தவிர, ரூ.107 கோடிக்கு மேல் எனது மருமகன் என்னை மோசடி செய்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் முஹம்மது ஹபீஸ் தற்போது கோவாவில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த வழக்கு கேரள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஹாசனின் மருமகன் செய்த மோசடிக்கு அக்ஷய், தாமஸ் வைத்யன் என்ற 2 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களின் பெயரை ஹாசன் தனது புகாரில் கூறியுள்ளார்” என்றார்.