க்ரைம்

திருச்சி | தொழிலதிபருடன் கார் ஓட்டுநர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சாமியார், பெண்ணுக்கு இரட்டை ஆயுள் சிறை

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே தொழிலதிபர், அவரது கார்ஓட்டுநர் ஆகியோர் காருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் கண்ணன், அவருக்கு நெருக்கமான பெண் என இருவருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் துரைராஜ்(42). அவரது கார் ஓட்டுநர் சக்திவேல் (27). இருவரும் 2007-ம் ஆண்டு திருச்சி-திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே காருடன் எரித்து கொடூரமாக கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், இந்த வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததைத் தொடர்ந்து, இவ்வழக்கு குறித்த விசாரணை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. திருச்சி சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் மலைச்சாமி தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், திருச்சி ரங்கத்தைச் சேர்ந்த சாமியார் கண்ணன்(55), அவருடன் கூடாநட்பில் இருந்த யமுனா(42), யமுனாவின் தாயார் சீதாலட்சுமி(64) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்போது, யமுனாவுடன் தொழிலதிபர் துரைராஜ் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக சிபிசிஐடி போலீஸாரிடம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் நோய் காரணமாக சீதாலட்சுமி மரணம் அடைந்ததால், மற்ற இருவர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே சிபிசிஐடி போலீஸார் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் மொத்தம் 52 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில், கொலை வழக்கில் தொடர்புடைய சாமியார் கண்ணன், யமுனா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆஜரானார்.

SCROLL FOR NEXT