ஈரோடு: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பெயரால், சமூக வலைதளங்களில் பரவும் மோசடி தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம், என ஈரோடு சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடந்து வருகிறது. இப்போட்டிகளுக்கு ரசிகர்களிடம் உள்ள வரவேற்பைப் பயன்படுத்தி, வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலியான பதிவுகள் பதியப்பட்டு வருகின்றன. இந்த பதிவில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பார்க்க, 50 ஜிபி செல்போன் டேட்டா இலவசமாக வழங்கப்படுவதாகவும், குறிப்பிட்ட இணைப்பில் நுழைந்தால் இந்த சலுகை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை உண்மை என நம்பி, அந்த இணைய இணைப்பிற்குள் சென்றவர்கள், செல்போன் டேட்டா கிடைக்காமல் ஏமாற்றத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் கூறியதாவது: உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக, இலவச செல்போன் டேட்டா தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் வரும் பதிவு மற்றும் இணைப்பு போலியானது. இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் நுழைந்தால், உங்கள் செல்போன் போன் முடக்கப்படவும், அதில் உள்ள தகவல்கள் திருடப்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, இந்த மோசடியான பதிவுகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். சைபர் க்ரைம் குற்றம் தொடர்பாக புகார்களை, 1930 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம், என்றனர்.