மும்பை: மகாராஷ்டிராவை சேர்ந்த அப்தாப் அமீன் பூனாவாலா (28) என்ற இளைஞரும் ஷிரத்தா வாக்கர் (26) என்ற பெண்ணும் டெல்லியில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த மே 18-ம் தேதி ஷிரத்தாவை அப்தாப் கொலை செய்தார். பிறகு அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி அருகில் வனப் பகுதியில் வீசினார். இந்த வழக்கில் அப்தாபை டெல்லி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஷிரத்தா, மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊரான வசாய் நகரின் திலுஞ்ச் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் அளித்த புகாரில், “அவன் என்னை கொன்று விடுவான், துண்டு துண்டாக வெட்டி விடுவான்” என்று புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திலுஞ்ச் போலீஸார் கூறும்போது, “அவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்த குடியிருப்பில் ஷிரத்தாவை அப்தாப் அடித்து காயப்படுத்தியதால் ஷிரத்தா இப்புகாரை அளித்தார். அப்தாபின் வன்முறை செயல்கள் அவரது குடும்பத்தினருக்கு தெரியும். அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து இனி நாங்கள் சண்டையிட்டுக்கொள்ள மாட்டோம் என ஷிரத்தா எழுதிக் கொடுத்ததால் அவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றனர்.
கடந்த 2020, நவம்பர் 23-ம் தேதி ஷிரத்தா இப்புகாரை அளித்துள்ளார். தனது சக ஊழியர் கரணுக்கும் வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த கொலையில் டெல்லி போலீஸார் இதுவரை அப்தாபிடம் பெற்ற வாக்குமூலம் மட்டுமே கொலைக்கான ஆதாரமாக உள்ளது. எனவே டெல்லி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சில உடல் பாகங்கள் மூலம் ஷிரத்தா கொலையை உறுதிப்படுத்த முடியுமா என தடயவியல் ஆய்வு முடிவுகளை எதிர்நோக்கியுள்ளனர்.