க்ரைம்

கரூர் | ஜவுளி நிறுவனத்தின் இ-மெயில் ஐ.டியை ஹேக் செய்து ரூ.25 லட்சம் மோசடி

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் வடக்கு ராமகிருஷ்ணபுரத்தில் தனியார் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஜவுளிகளை ஏற்றுமதி செய்து வந்துள்ளது.

இது தொடர்பான பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை இ-மெயில் மூலமே இரு நிறுவனங்களும் பகிர்ந்து வந்துள்ளன.

இந்நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி ரூ.25 லட்சம் மதிப்பிலான ஜவுளிகளை கரூரில் இருந்து ஜெர்மனி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்த நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு பணம் தருவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து, 3 மாதங்களுக்குப் பிறகு இந்தத் தொகை தொடர்பாக கரூர் ஏற்றுமதி நிறுவனம் கேட்டபோது, தாங்கள் ஏற்கெனவே தொகையை வழங்கி விட்டதாக ஜெர்மனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த விசாரணையில், கரூர் ஏற்றுமதி நிறுவனத்தின் இ-மெயில் ஐ.டியை யாரோ ஹேக் செய்து, ஜெர்மனி நிறுவனத்திடம் பேசி, ரூ.25 லட்சத்தைப் பெற்று, மோசடி செய்த விவரம் தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் சைபர் கிரைம் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT