வேலூர்: சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் விஸ்வதாரணி (22). இவர், அரக்கோணத்தில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் இடையில் இயக்கப்படும் பயணி கள் ரயிலில் நேற்று முன்தினம் இரவு பயணம் செய்துள்ளார்.
இந்த ரயில் காட்பாடி கழிஞ்சூர் ரயில்வே கேட்டை மெதுவாக கடந்து சென்றது. அப்போது, இளைஞர் ஒருவர் பெண்கள் பெட்டியில் திடீரென ஏறியுள்ளார். அவர் விஸ்வதாரணி கையில் வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றார். இதனால், சுதாரித்துக்கொண்ட விஸ்வதாரணி செல்போனை கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.
செல்போனை விடாத விஸ்வதாரணி ரயில் பெட்டியின் வாசல் வரை இழுத்து வந்த இளைஞர் கீழே தள்ளிவிட்டு அவரும் ரயிலில் இருந்து கீழே குதித்து செல்போனுடன் தப்பி ஓடிவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் சிலர் காட்பாடி ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்த தகவலின்பேரில் காட்பாடி ரயில்வே காவலர்கள் விஸ்வதாரணியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பாக ரயில்வே காவல் ஆய்வாளர் சித்ரா வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இளைஞர் குறித்து விசாரணை நடத்தி வந்தார். அதில், குடியாத்தம் அருகேயுள்ள கீழ் ஆலத்தூர் சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் (24) என்பவரை கைது செய்தனர்.