புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் (28), ஷிரத்தா வாக்கர் (26) ஆகிய இருவரும் டெல்லியில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மே மாதம் ஷிரத்தாவை கொலை செய்த அப்தாப், உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி வனப்பகுதியில் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி போலீஸார், அப்தாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்தாபின் போலீஸ் காவல் நேற்று முடிவடைய இருந்தது. இதையடுத்து அவரை, போலீஸார் டெல்லியிலுள்ள பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காணொலி முறையில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை மேலும் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அவிரால் சுக்லா அனுமதி அளித்தார். பாதுகாப்பு கருதி, அவரை நேரில் ஆஜர்படுத்த முடியவில்லை என்று நீதிபதியிடம் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.